செல்ல, இதனால் வாழ்விழந்த கண்ணகி, தனது கணவன் திரும்பி வரும் அந்த நாளுக்காகக் காத்திருக்கிறாள். தான் செய்த தவறுக்கு வருந்தி கோவலன் தனது இல்லாள் கண்ணகியிடம் வந்து சேர்கிறான். அதற்குப் பிறகு சோழ நாட்டில் வாழப்பிடிக்காது கோவலன்-கண்ணகி இணையர்கள் பாண்டிய தேசம் நோக்கிப் பயணித்து, மதுரையை வந்தடைகிறார்கள். அங்கே ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி, இன்பமும், மகிழ்ச்சியும் தழுவ வாழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், 'சூழ்வினைச் சிலம்பால்' நேர்கிறது அவலம். செய்யாத குற்றத்திற்கு அரசனின் தண்டனைக் களத்தில் இன்னுயிர் நீத்த கணவனுக்காக, போர்க்குரல் எழுப்பி பாண்டியன் நெடுஞ்செழியனை கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்து, மன்னன் செய்த தவறை அவனுக்கே உணர்த்திவிட்டு, நெருப்புப் பிழம்பாய், 'கீழ்த்திசை வாயிற் கணவனொடு புகுந்தேன், மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கென' சொல்லி கால்போன போக்கிலே நடக்கத் தொடங்கினாள்.
அடர்காடுகள், ஓங்கி உயர்ந்த மலைகள், பாய்ந்து செல்லும் ஆறுகள், வெள்ளியாய் வீழும் அருவிகள் என இவை அனைத்தையும், கண் பார்க்க மறந்தவளாய் கண்ணகி மேற்கு மலைத்தொடர்களில் நடக்கிறாள். கணவன் மாண்ட நாளிலிருந்து சரியாக பதினான்காம் நாள், தற்போதைய கண்ணகி கோட்டத்திற் சென்று, தனது அன்புக் கணவனைச் சென்றடைய வேண்டி கதறியழுகிறாள். தலைவிரி கோலமாய், மலைவேங்கை மரத்தின் கீழ் அழுது அரற்றும் கண்ணகியை அங்குள்ள மலைவாழ் மக்கள் கண்டறிந்து சேரன் செங்குட்டுவனிடம் தெரிவிக்கின்றனர். பத்தினியாய் வாழ்ந்து, இவ்வுலகை விட்டு ஏகிய அந்தப் பெண்ணின் நினைவாக குணவாயிற் கோட்டத்தரசன், சேர மாமன்னனும், இளங்கோவின் இளவலுமான செங்குட்டுவன் எழுப்பிய கோயிலே தற்போதைய கண்ணகி கோட்டம். சிலப்பதிகாரத்தின் வரந்தரு காதையிலும், கால்கோட் காதையிலும் இளங்கோவடிகள் உவமை செய்து பாராட்டும் அனைத்துக் கூறுகளும் இன்றைக்கும் இங்கே தென்படுவது வியப்பிற்குரிய உண்மை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பனிமேகம் படர்ந்த மலைகள், கரும்பச்சையாய்த் தெரியும் அடர்ந்த காடுகள், அதனுள்ளே அமைதியாய் மேய்ந்து கொண்டிருக்கும் பலவகையான விலங்குகள், முல்லையாறும், பெரியாறும் சேர்ந்து கலந்து அணையாய்த் தேங்கியுள்ள முல்லைப் பெரியாற்று நீர்த் தேக்கம், ஆகிய இவற்றின் பின்னணியில் மங்கலதேவி கண்ணகி கோட்டம் ஏறக்குறைய ஆறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
வேங்கை மரங்கள் சூழ்ந்த அமைதியான கானகப்பகுதியின் நடுவே அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோட்டத்திற்குச் செல்ல இரண்டு பாதைகள் உள்ளன. கேரள மாநிலம் குமுளியிலிருந்து தேக்கடி பகுதியை ஒட்டிய காடுகளில் வளைந்து நெளிந்து செல்லும் பாறைகள் நிறைந்த பாதை. வாகனத்தில் பயணம் செய்தாலும் கூட மிக ஆபத்தான் மலை விளிம்புகளைக் கொண்ட பகுதி இது. தமிழகப்பகுதியான கூடலூருக்கு அருகிலுள்ள பளியன்குடியிலிருந்து சற்றே சரிவாய்ச் செல்லும் 6.6 கி.மீ. தூரமுள்ள பாதை. அதே பளியன்குடியிலிருந்து செங்குத்தாய்ச் செல்லும் வேறொரு பாதையும் உண்டு. நான்கே கி.மீ.தான். ஆனால் மன உறுதியும், உடல் வலிவும் மிகவும் அவசியம்.
தமிழகப்பகுதியிலிருந்து செல்லக்கூடிய பாதை இரண்டிலுமே மனிதர்கள் நடந்து தான் கடக்க இயலும். அதில் வாகனங்களுக்கு கொஞ்சமும் வாய்ப்பேயில்லை. மலை ஏறத் தயங்குபவர்கள் மட்டும் குமுளி சென்று அங்கிருந்து ஈப்பு (ஜீப்) வாகனத்தில் பயணிக்கலாம். கேரள ஓட்டுநர்களின் 'திறமை' மீது நம்பிக்கை கொண்டவர்கள் மட்டும் அந்த வாகனங்களில் பயணிப்பது நல்லது. ஒரு வாகனத்தை மற்றொரு வாகனம் முந்திச் செல்வது (மலை விளிம்புகளில் கூட) மிக இயல்பான காட்சி. ஆகையால் உயிருக்கு எந்த உறுதியுமில்லை.
கேரள எல்லையிலிருந்து தமிழக எல்லையைக் கடந்து 44 அடி தூரத்தில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோட்டம், கேரள அரசால் அந்த மாநிலத்தின் சுற்றுலாப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு அருகிலுள்ள தக்கலையில் அமைந்துள்ள பத்மநாபபுரம் அரண்மனை, முழுவதுமாக கேரள அரசால் பேணப்பட்டு வருகிறது. உள்ளே எங்கு திரும்பினாலும் மலையாளிகளே பணியாளர்களாய் நிறைந்து காணப்படுகின்றனர். அங்கு தமிழக அரசு எந்த விதத்திலும் மூக்கை நுழைக்க முடியாது. ஆனால் தமிழ்நாட்டு எல்லையிலுள்ள மங்கலதேவி கண்ணகி கோட்டத்தில் ஒவ்வொரு சித்திரை முழு நிலவு நாளன்றும் நடைபெறும் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சியில் தமிழர்கள் கலந்து கொள்ள கேரளத்தின் அனுமதி கேட்டு, தமிழகம் வாய் பார்த்து நிற்கிறது. இங்கு நடைபெறுகின்ற நிகழ்வுகளில் பங்கேற்க தமிழகத்தின் பல பகுதியிலிருந்தும் பெருந்திரளான மக்கள் பங்கேற்கின்றனர். மலையாளிகள் இருபது விழுக்காட்டினரும், தமிழர்கள் எண்பது விழுக்காட்டினரும் கலந்து கொண்டாலும் கூட, இவ்விரு தரப்பிலும் எவ்வித வேறுபாடும் பார்க்கப்படுவதில்லை. பிரச்சனையே கேரளக் காவல் துறையும், அந்த மாநில அரசும் தான். என்ன பிரச்சனை நடந்தாலும் தமிழகக் காவல்துறை கைகட்டி வாய்பொத்தி தான் நிற்கும். இது தமிழர்களின் சாபக்கேடு போலும்.மங்கலதேவி கண்ணகி கோட்டம் தமிழகத்திற்கே சொந்தம் என்ற சான்றுகளைப் பகிர்ந்து கொள்ள, இங்கு காணப்படும் கி.பி.10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இராசராசசோழன் மற்றும் கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மாறவர்ம குலசேகர பாண்டியன் ஆகியோரது கல்வெட்டுக்களே போதும். 1893ஆம் ஆண்டிற்கான இந்திய நில அளவை வரைபடமும், 1916ஆம் ஆண்டிற்கான இந்திய சர்வேயர் ஜெனரல் வரைபடமும் கண்ணகி கோவில் தமிழ்நாட்டிற்குள் அமைந்துள்ளதை தெளிவுபடுத்துகின்றன. 1952, 1957 மற்றும் 1959ஆம் ஆண்டுகளில் தமிழக அரசால் வெளியிடப்பட்ட வரைபடங்களும் இக்கோவில் தமிழ்நாட்டு எல்லைக்குள் இருப்பதை உறுதி செய்கின்றன. கி.பி.1772ஆம் ஆண்டு சேர மன்னன் தம்பிரான் ரவிவர்மாவுக்கும், அப்போது மதுரையை ஆண்ட இராணி மங்கம்மாளுக்கும் இடையே நடைபெற்ற எல்லைப்போரில், உத்தமபாளையம் தாலுகா முழுவதும் தமிழ்நாட்டைச் சேர்ந்ததாக சேர மன்னர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டது (நன்றி கண்ணகி கோட்டம் தமிழருக்கே சொந்தம், பழ.நெடுமாறன்).
கேரளம் மற்றும் தமிழக நில அளவை அலுவலர்கள் பலமுறை கலந்து பேசி கண்ணகி கோட்டம் தமிழகப்பகுதியைச் சார்ந்தது என்று கூட்டாகவே அறிவித்துள்ளனர். ஆனாலும் கேரள அரசு தமிழர்களை நிம்மதியாக வழிபட விடாது செய்கின்ற அடாவடித்தனம் ஒவ்வொரும் ஆண்டும் அதிகரித்த வண்ணம் உள்ளது. தாய்த்தெய்வக் கோவில்கள் அனைத்தும் வடக்கு பார்த்த வாசலையே கொண்டிருக்கும். இதே வடிவமைப்பில், கண்ணகி கோட்டத்திலிருந்த, தமிழகத்தை நோக்கிய வடக்குவாசல் இந்த முறை புறக்கணிக்கப்பட்டு, தெற்கு வாசல் வழியாக அனைவரையும் கேரளக் காவல் துறையினர் அனுமதித்தது, பச்சையான இனத் துரோகமன்றி வேறல்ல. கடந்த 83ஆம் ஆண்டு கண்ணகி கோவிலுக்குள் அத்துமீறி மலையாளிகள் துர்க்கையின் சிலையை நிறுவினர். அது மட்டுமன்றி அங்கிருந்த கண்ணகி சிலையையும் உடைத்து நொறுக்கி விட்டனர். இந்த முறை தெற்கு வாசல் வழியாக நுழையும் இடத்தில் அமைந்திருந்த சிவன் கோவிலுக்குள் துர்க்கை சிலையை வைத்து, மக்கள் அனைவரையும் அங்கு ஒருங்கிணைப்பதில் கேரளக் காவல்துறை அதிக ஆர்வம் காட்டியது. அக்குறிப்பிட்ட கோவிலை பந்தல் வேய்ந்து, சிறப்பாய் அலங்கரித்திருந்த கேரள அரசு, கண்ணகி கோவிலைச் சுத்தம் கூட செய்யவில்லை என்பதோடு, அக்கோயிலை அலங்கரிக்க தமிழர்களை அனுமதிக்கவுமில்லை என்பது வேதனைக்குரியது.
கேரளத்தின் அத்துமீறிய செயற்பாடுகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த நிலைக்கு உடனடி முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால், கடந்த 1972ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த திமுக அரசு பளியன்குடி சாலையைச் சீரமைக்க உத்தரவிட்ட பணி தற்போது தொடங்கப்பட வேண்டும். தமிழக எல்லைக்குள் அமைந்திருக்கும் மங்கலதேவி கண்ணகி கோட்டத்தைச் சீரமைத்து, புதிய கண்ணகி சிலையை அங்கே அமைப்பதற்கும் அரசு முனைய வேண்டும். அழகு மிக்க கட்டுமானத்துடன் திகழ்ந்த கண்ணகி கோட்டம் தற்போது சிதிலமடைந்து, கட்டுமானக் கற்கள் அந்தப் பகுதி முழுவதும் கேட்பாரின்றிக் கிடக்கின்றன. அதனையும் ஒழுங்கமைத்தால் பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் வெளித்தெரியக்கூடும். ஏனெனில் அவற்றுள் நிறைய கல்வெட்டுக் கற்களும் கிடக்கின்றன. கணவனை இழந்த கண்ணகி பாண்டியனிடம் நீதி கேட்டு, மதுரையை எரித்த பின்னர், இந்த நெடுங்குன்றம் வந்து சேர்ந்தாள். அவளின் புகழ் பாட கிடைத்த ஓரிடம் நம் கண் முன்னே சிதைந்து கொண்டிருக்கிறது. தன் மக்கள், தன்னைக் காண தடையின்றி வரும் உரிமையைக் கோரி கண்ணகி காத்துக் கிடக்கிறாள். திருக்குவளைச் சோழன் என்ன செய்யப்போகிறார்?




