Monday, May 26, 2008

கேரளத்தின் காட்டமாய்... கண்ணகியின் கோட்டம்..!

தமிழர்கள் சித்திரை முழு நிலவு நாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்வது வழக்கம். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதிலிருந்து கண்ணகி கோட்டத்தில் வழிபாடு நடத்துவது வரை பல்வேறு உதாரணங்களை இங்கு நாம் சுட்டலாம். இதே நாளில் தான் பொதிகை மலையில் அகத்தியருக்கும் சிறப்பு பூசனைகள் நடைபெறுகிறது. இந்த சித்திரைத் திங்களின் தொடக்கத்தை கண்ணகி கோட்டத்திற்குச் சென்று கொண்டாடி மகிழத் திட்டமிட்டு, தமிழிசை அறிஞர் மம்மது, இயற்கை வேளாண் அறிஞர் பாமயன், குறும்பட இயக்குநர் ரங்கநாதன் உள்ளிட்ட சில நண்பர்களோடு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியான கூடலூர் நோக்கி பயணித்தோம். கண்ணகி கோட்டம் தொடர்பாக ஆவணப்படம் ஒன்றைத் தயாரிக்க வேண்டும் என்ற உந்துதலின் அடிப்படையில் பல்வேறு முன்னேற்பாடுகளைச் செய்து, பயண நிரலைத் திட்டமிட்டுக் கொண்டோம். முழு நிலவிற்கு இரண்டு நாட்கள் முன்னரே கூடலூர் சென்று தங்கி, கம்பத்தில் அமைந்திருக்கும் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையின் தலைவர் தமிழாதனைச் சந்தித்து நேர்காணல் செய்தோம்.
கடந்த ஏப்ரல் 20ஆம் நாள் காலை 5.30 மணிக்கு கூடலூரிலிருந்து குமுளிக்குப் பேருந்தில் பயணம் செய்து, கேரள மாநிலம் தேக்கடியை வந்தடைந்தோம். அங்கு மங்கல தேவி கண்ணகி கோட்டத்திற்குச் செல்ல நூற்றுக்கணக்கான ஈப்புகள் நின்றிருந்தன. தேனி மாவட்ட ஆட்சியரின் வருகைக்காகவும், தமிழர்களின் பாதுகாப்பிற்காகவும் தமிழகக் காவல்துறையினர், கேரள காவலர்களோடு நின்று கொண்டிருந்தனர். பெரும்பாலான ஈப்புகளில் கண்ணகியின் கொடி பறக்க, தமிழர்களும், மலையாளிகளும் மங்கலதேவி கண்ணகி கோட்டத்தை நோக்கி பயணப்பட்டனர். தேக்கடி பகுதியிலிருந்து 19 கி.மீ. அடர்ந்த காடுகளிடையேயும், மலைப்பகுதிகளையும் கடந்து சென்றால் கண்ணகி கோயிலைச் சென்றடையலாம். நாங்கள் ஆளுக்கொரு ஈப்பில் தொற்றிக் கொண்டு (அமர்ந்து கொண்டு அல்ல) எங்களது பயணத்தைத் தொடங்கினோம். பத்திலிருந்து பன்னிரெண்டு பேர் ஒரு ஈப்பு வாகனத்தில் பயணிக்கும் வண்ணம், ஒவ்வொருவரையும் உள்ளே திணித்திருந்தனர் கேரள ஓட்டுநர்கள். நபர் ஒருவருக்கு ரூ.40லிருந்து ரூ.50 வரை கட்டணமாகப் (செல்வதற்கு மட்டும்) பெறப்பட்டது.


தமிழக எல்லைக்குள் பாதுகாக்கப்பட்ட கானகப்பகுதியில் அமைந்திருக்கும் கண்ணகி கோட்டம், கடல் மட்டத்திலிருந்து 4 ஆயிரத்து 380 அடி உயரத்தில் உள்ளது. ஆரிய மன்னர்களான கனகன், விஜயன் ஆகியோரைப் போரில் வென்று, இமயமலையிலிருந்து கல்லெடுத்து, அம்மன்னர்களையே சுமக்கச் செய்து, தமிழகத்திற்குக் கொண்டு வந்து, தற்போதுள்ள இந்த மலையில் பத்தினி தெய்வமான கண்ணகிக்கு, சேரன் செங்குட்டுவன் கோயில் அமைத்தான் என்பதை சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் வரலாறாய்ச் சுட்டியிருக்கிறார். அதனை மெய்ப்பிக்கும் வகையில் இன்றளவும் பெருஞ் சிறப்புடன் நின்று கொண்டிருக்கிறது இந்தக் கண்ணகி கோட்டம். சோழப் பேரரசர்கள் ஆண்ட புகார்ப் பெரு நகரில் பிறந்து, கோவலனைக் கைப்பிடித்து, வாழ்விடம் தேடி பாண்டிய மாமன்னர்கள் தலைநகராம் மதுரைக்குப் புலம் பெயர்ந்து, அங்கே தவிர்க்கவியலாத நிலையில் தனது கணவனைப் பறி கொடுத்துவிட்டு, ஏதிலியாய் மேற்கு மலைத் தொடர்களைக் கடந்து தற்போதுள்ள கண்ணகி கோட்டம் சென்று உயிர் துறந்தாளாம் கண்ணகி. பாண்டியன் நெடுஞ்செழியனிடம் நீதி கேட்டு மதுரையை எரித்த கண்ணகி, இன்று தனது புகழுடல் சாகாது காக்க வேண்டி தமிழக, கேரள அரசுகளிடம் நீதி கேட்டு சிதிலமடைந்து கொண்டிருக்கிறாள் என்பது வேதனைக்குரிய செய்தி.

குமுளி மலைச் சாலையில் நமது பயணம் தொடங்கிய சில நிமிடத்திற்கெல்லாம், கேரள வனத்துறையினரின் சோதனைச் சாவடியில் கண்ணகி கோட்டம் செல்கின்ற அனைவரும் நிறுத்தப்பட்டோம். அங்கு பல்வேறு சோதனைகள் நடத்தப்படுகின்றன. ஞெகிழிப்பைகளுள் அடைக்கப்பட்ட தண்ணீர், பிஸ்கெட் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மற்றும் எரி பொருட்கள் ஆகியவை இரக்கத்திற்கே இடமின்றி வீசியெறியப்படுகின்றன. எறிந்த இடத்தில் அனைத்துப் பொருட்களும் மலைபோல் குவிந்து கிடந்ததைப் பார்க்க முடிந்தது. கரடு முரடான அந்த மலைப்பாதையில் ஈப்புகளின் வழக்கமான இரைச்சலோடு பயணம் தொடர்ந்தது. செல்லும் வழியெங்கும் மக்கள் சாரைசாரையாகச் சென்று கொண்டிருந்தனர். முன்னே செல்லும் ஈப்புகளால் புழுதி பறக்க, நமது முகமும், தலையும் பல்வேறு வடிவங்களை எடுத்திருந்தன. அந்த மலைச் சாலையிலும் வாகனங்களின் வேகம் கொஞ்சம் கூட குறையவில்லை. அருகில் தொங்கிக் கொண்டிருந்த வாகன நடத்துநர் ஒருவரிடம், 'ஆபத்தான இந்தப் பாதையில் ஏன் இவ்வளவு வேகமாக வாகனத்தை ஓட்டுகிறார்கள்?' என்று கேட்டோம். அதற்கு அவர், 'மாலை 5 மணிக்குள் குறைந்த பட்சம் 9 தடவைகளாவது (டிரிப்) சென்றால் தான் பணம் பார்க்க முடியும்' என்றார். பொருளீட்டும் ஆசையில் மனித உயிர் எத்தனை மலிவாக்கப்படுகிறது என்பதை நினைத்துப் பார்த்தபோது, கேரளத்தாரின் மனித நேயம் நம்மை வியப்புறச் செய்தது.
செல்லும் வழியெங்கும் கேரள வனத்துறையினரும், காவல் துறையினரும் வனத்தின் 'சூழலைப் பாதுகாக்க' பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்ததைக் காண முடிந்தது. 'மங்கலதேவி கண்ணகி கோட்டத்திற்குச் செல்லும் வழி' என்ற தமிழ்ப் பெயர்ப் பலகைகள் ஆங்காங்கே கீழே சாய்க்கப்பட்டிருந்தன. பக்கத்தில் மலையாளப் பதாகைகள் எவ்வித இடர்ப்பாடுகளுமின்றி நிமிர்ந்து நின்று கொண்டிருந்தன. குறைந்தபட்சம் இருநூறு ஈப்புகள் அந்த ஒரு நாளில் 9 டிரிப்புகள் பயணம் செய்கின்றனவென்றால், போக வர 40 கி.மீ.பயணம் என வரையறுத்தால் கூட, ஒரு டிரிப்புக்கு ஒரு ஈப்பு, மலைப்பாதையில் பயணிக்க குறைந்தளவு 4 லி டீசல் செலவாகும். அப்படியானால் 7200 லிட்டர் டீசல் அந்த ஒரு நாளில் மட்டும் செலவழிக்கப்பட்டிருக்கக்கூடும். அந்தப் பகுதியில் வெளியாகும் கரியமில வாயுவால் எவ்வளவு உயிரினங்கள் பாதிக்கப்பட்டிருக்கும், செடி, கொடி, மர இனங்கள் கடுமையான சூழல் கேட்டிற்கு ஆளாகியிருக்கும் என்பதை கணக்கிட்டுப் பார்த்தால், சுற்றுச்சூழல் குறித்த கேரளத்தின் அக்கறை, 'தமிழர் உரிமையான கண்ணகி கோட்டத்தைக் கைப்பற்றுவதில்' மறைமுகப் பங்காற்றுவதை உணர முடியும்.

அடர்ந்த காடுகளைக் கடந்து மலை விளிம்புகளில் நமது பயணம் தொடர்ந்தது. இரண்டு பக்கமும் ஆயிரக்கணக்கான அடிகளைக் கொண்ட பள்ளங்கள், புதர்க்காடுகள் இருந்தபோதும் கூட, ஈப்பு வாகன ஓட்டிகளின் வேகம் மட்டும் சிறிதும் குறையவில்லை. இந்த அழகில் ஒன்றையொன்று முந்திச் செல்வதில் அதிகளவு அக்கறை காட்டுவதும் நமது அச்சத்தை கூடுதலாக்குகின்றன. மலை விளிம்புகளில் இருக்கும் வளைவுச் சாலைகளில் பாதை கொஞ்சமும் இல்லை. திட்டுத் திட்டாய்ப் பாறைகள் தான் இருக்கின்றன. இவற்றில் ஏறும்போது ஓட்டுநருக்கு ஏதேனும் திணறல் ஏற்பட்டால், வாகனம் சற்று தூரம் பின்னால் சென்று பிறகே முன் செல்ல முடியும். இந்த நேரத்தில் கவனம் கொஞ்சம் பிசகினாலும் அதல பாதாளத்தை நோக்கி ஈப்போடு விழ வேண்டியதுதான். மனித உயிர்கள் குறித்த அக்கறை வாகன ஓட்டிகளுக்கு இருப்பதாகவே தெரியவில்லை. இந்த ஈப்புகளில் பயணம் செய்தவர்களில், வாந்தியெடுக்காதவர்கள் உண்மையில் தெய்வப்பிறவிகள் தாம். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு சென்ற நமது பயணம் கண்ணகி கோட்டம் வந்தடைந்ததும் நிறைவு பெற்றது. தூரத்தே தெரியும் முல்லைப்பெரியாறு அணை தண்ணீர்த் தேக்கப் பகுதியின் பின்னணியில், கண்ணுக்கெட்டிய தூரம் வரை மலை விளிம்பில், மனிதத் தலைகள் நிறைந்து காணப்பட்டன. ஈப்புகள் வருவதும் போவதுமாய் எங்கும் ஒரே தூசி மண்டலம். சில நூறு அடிகள் தூரம் நடந்து சென்றால், கண்ணகி கோட்டம் அழகாய்த் தென்படுகிறது. காலணியைக் கழற்றி வைத்துவிட்டு உள்ளே சென்றோம். நிறைய பேர் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். தமிழகத்தை நோக்கியிருக்கும் வடக்கு வாசல் வழியாக மக்களை அனுமதிக்கும் இயல்பான சூழலை மறுத்து, கேரளக் காவல்துறையினர் மக்கள் அனைவரையும் தெற்கு வாச்சல் வழியாக அனைவரையும் அனுமதித்துக் கொண்டிருந்தனர்.

தாய்த் தெய்வக் கோவில்கள் அனைத்தும் வடக்கு திசையை நோக்கி அமைத்து அதன் வழியே மக்கள் செல்கின்ற நிலை எங்கும் உள்ள பண்பாடு. ஆனால் தற்போது தெற்கு நோக்கி மாற்றிய மர்மம் கேரள அரசுக்கே வெளிச்சம். அது மட்டுமன்றி, தெற்கு வாசல் வழியாக உள்ளே நுழைந்ததும் காணப்படும் கோயில் ஒன்றில் மக்களை ஒருங்கிணைப்பதில் கேரளக் காவல்துறை அதிக ஆர்வம் காட்டியது. சிவன் வீற்றிருந்த அந்தக் கோவிலுக்குள் சில ஆண்டுகளுக்கு முன்பு துர்க்கை சிலையை நிறுவி கேரள அரசு அத்துமீறல் செய்தது. துர்க்கைக்கு முதன்மை அளித்து கண்ணகி கோயிலை மக்கள் மத்தியில் மறக்கச் செய்வதற்கு கேரள அரசு தந்திரம் செய்வதாக தமிழறிஞர்கள் பலர் குற்றம் சாட்டினர். சொல்லி வைத்தாற்போல் அவ்விடம் மட்டும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, பந்தல் வேயப்பட்டிருந்தது. கண்ணகி கோயில் எந்தவித அலங்காரத்திற்கும் உட்படுத்தப்படவுமில்லை; அதற்குத் தமிழர்களை அனுமதிக்கவுமில்லை. கண்ணகி வழிபாட்டில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்களும், தமிழறிஞர்களும் நிறைய பேர் வந்திருந்தனர். அது மட்டுமன்றி ஆங்காங்கு அவர்கள் நிகழ்த்திய உரையாடல்களில் மக்கள் பலர் பங்கேற்றது மகிழ்ச்சிக்குரியதாய் இருந்தது. மங்கல தேவி கண்ணகி அறக்கட்டளையைச் சார்ந்த தன்னார்வத் தொண்டர்கள், மக்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டதோடு, வந்திருந்தோர் அனைவருக்கும் உணவுப் பொட்டலங்களும் வழங்கினர். கேரள அரசு ஆங்காங்கே தண்ணீர்த் தொட்டிகளை அமைத்திருந்தது.
தமிழர்கள் எண்பது விழுக்காட்டினரும், மலையாளிகள் இருபது விழுக்காட்டினரும் கலந்து கொண்ட இவ்வழிபாட்டில் பாமர மக்களாகிய அவர்களால் எந்தவித வேறுபாடும் பாராட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மங்கலதேவி கண்ணகியை வழிபடவே தாங்கள் வந்திருப்பதாக இருசாராரும் ஒருமித்த உணர்வுடன் தெரிவித்தனர். ஆனால் கேரள அரசு துர்க்கை வழிபாடு என்ற ஒன்றைத் திணித்து இந்த உண்மையை மூடி மறைக்க முயல்கிறது. தமிழக-கேரள எல்லை வரையறுப்பில், கேரள மாநிலத்தின் எல்லையிலிருந்து 44 அடி தூரம் தமிழக எல்லையைக் கடந்து அமைந்துள்ள இந்தக் கோயிலை, தனது மாநிலத்தின் சுற்றுலா இடமாக வலிய அறிவித்து, கண்ணகி கோட்டத்தின் 'சுற்றுச்சூழல் மேம்பாட்டில்' கேரள அரசு அதிக அக்கறை காட்டுவது நம்மை புல்லரிக்கச் செய்கிறது. மிக அண்மையில் முல்லைப் பெரியாறு அணை நீர்த் தேக்க வனப்பகுதியில், தமிழகத்தின் அனுமதியின்றி அதி விரைவு ரோந்துப் படகு ஒன்றை இயக்க கேரள அரசு முற்பட்டது. இதிலிருந்து வெளிப்படும் இரைச்சலும், புகையும் வனச்சூழலுக்கு கேட்டினை உருவாக்கும் என்பதால் கேரள வனத்துறை உயர் அலுவர் பத்மா மெகந்தி அப்படகிற்கு அனுமதி மறுத்திருந்தார். இதனால் கோபமுற்ற கேரள அரசு, நேர்மையான அந்த அதிகாரிக்கு பல்வேறு வகையிலும் மன உளைச்சலை ஏற்படுத்தி, அந்தப் பணியிலிருந்து வற்புறுத்தி மாறுதல் பெற்றுச் செல்ல வழியேற்படுத்தி அனுப்பியும் விட்டது. இந்தக் கேரள அரசு தான், கண்ணகி கோட்டம் தமிழகத்திடம் சென்றால், சுற்றுச்சூழல் மாசு அதிகரித்துவிடும் என்று குற்றம் சாட்டுகிறது. சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் தொடர்ச்சியாகப் பேணப்பட்டும், ஊக்கமளிக்கப்பட்டும் வந்த கண்ணகி கோட்டத்தில் காணப்படும் கல்வெட்டுக்களின் வாயிலாக இவை தமிழகத்திற்குத் தான் சொந்தம் என பல்வேறு வகையிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை நாம் அறியலாம். முதலாம் இராசராச சோழன் மற்றும் பாண்டியன் மாறவர்ம குலசேகரன் ஆகியோரின் காலத்துக் கல்வெட்டுக்கள் இன்றும் சான்றாய் நின்று உண்மையைப் பகர்கின்றன.

வேங்கை மரஞ்சூழ் கானகத்தின் நடுவே கண்ணகி கோட்டம் அமைந்துள்ளது என்று இளங்கோவடிகள் வரந்தரு காதையிலும், கால்கோட் காதையிலும் பல்வேறு இடங்களில் சுட்டிக் காட்டுகிறார். தற்போதும் கண்ணகி கோட்டத்தைச் சுற்றி வேங்கை மரங்கள் காணப்படுவது வியப்புற்குரிய ஒன்று. கடந்த 1883ஆம் அண்டு வெளியிடப்பட்ட புனித ஜார்ஜ் கெசட் 719-721ஆம் பக்கங்களில், 'வண்ணாத்திப்பாறை ஒதுக்கப்பட்ட காடுகள்' என தற்போது அமைந்துள்ள கண்ணகி கோட்டப்பகுதி குறிப்பிடப்பட்டுள்ளதோடு, இதனுள் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோவில் தமிழகத்திற்கே சொந்தம் என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 1934ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள மதுரை மாவட்ட கெசட்டில் இக்கோவில் தமிழகத்திற்குள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கூடலூர் சிற்றூரைச் சேர்ந்த மக்கள் கோவிலுக்கு வழிபடச் செல்வதற்காக 12 அடி அகலம் உள்ள வழித்தடம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்ட விபரமும் அதே கெசட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது (நன்றி: கண்ணகி கோட்டம் தமிழருக்கே சொந்தம், பழ.நெடுமாறன்). கூடலூர் பெருமாள் கோவிலில் காணப்படும் கல்வெட்டிலும் கண்ணகி கோவிலுக்கு 60 கலம் நெல்லை நிவந்தமாக அளிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோட்டம் அமைந்துள்ள ஆறு ஏக்கர் நிலத்தில் சிவன், திருமால், முருகன் உள்ளிட்ட தெய்வங்கள் இருந்திருக்கக்கூடும். அந்தக் கோவில்கள் பாழடைந்து கட்டுமானக் கற்கள் அனைத்தும் அப்பகுதி முழுவதும் இறைந்து கிடக்கின்றன. யானைகளால் தாக்குதலுக்கு ஆளாகிவிட்டதாக சிலர் கூறினாலும், அதனை நம்புவதற்கு நமது மனம் இடம் தரவில்லை. கண்ணகி கோட்டத்தில் வழிபாடு நடத்திவிட்டு பளியன்குடி பாதை வழியாக நடக்கத் தொடங்கினோம். ஆபத்து அதிகமில்லாத அதே சமயத்தில் வெறும் 7 கி.மீ. தொலைவில் மலைக்குக் கீழேயுள்ள பளியன்குடியைச் சென்றடையலாம். 'கண்ணகி கோட்டத்தைப் பொறுத்தவரை தமிழக அரசு உடனடியாகச் செய்ய வேண்டிய பணிகள் இரண்டு உள்ளன. ஒன்று, பளியன்குடி மலைச்சாலையைச் சீரமைத்து வாகனங்கள் செல்லும் வண்ணம் அமைப்பது, மற்றொன்று, தமிழக எல்லைப்பகுதியில் அமைந்துள்ள கண்ணகி கோட்டத்தை கேரள ஆதிக்கத்திலிருந்து மீட்டு, தமிழக அரசே அதனைச் செப்பனிடுவது. இவையிரண்டும் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையேல் இன்னும் சில ஆண்டுகளுக்குள் கேரளத்தின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கண்ணகி கோட்டம் கொண்டு வரப்படுவதோடு, அடையாளம் தெரியாமல் அழிக்கப்படும் அபாயத்திற்கும் வாய்ப்புண்டு' என மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையின் தலைவர் தமிழாதன் தெரிவித்தார். மேலும் அவர், 'கடந்த 1972ஆம் ஆண்டு அவசரநிலைப் பிரகடனத்தின்போது ஆட்சியிலிருந்த திமுக அரசு, பளியன்குடி மலைச்சாலையைச் சீரமைக்க 70 இலட்சம் ரூபாய் ஒதுக்கி பணிகளைத் தொடர முயன்றது. ஆனால் என்ன காரணத்தாலோ அப்பணிகள் தொடர்ந்து நடைபெறவில்லை. கலைஞர் தலைமையிலான தமிழக அரசு தவிர வேறு எவரும் கண்ணகி கோட்டத்தில் தமிழரின் உரிமையை மீட்டெடுக்க வாய்ப்பில்லை என்ற நிலையில் அரசின் விரைந்த நடவடிக்கையே இதற்கான தீர்வாக அமையும்' என்றார்.

இன்று தமிழகத்தில் வணங்கப்பட்டு வரும் மாரியம்மன், காளியம்மன், காமாட்சி, இசக்கி, திரௌபதி போன்ற அனைத்து தாய்த்தெய்வங்களும் கண்ணகி வழிபாட்டின் எச்சங்களாகும். அதே போன்று கேரளத்திலும் பகவதி வழிபாடு முதன்மையாய் விளங்குகிறது. இலங்கை, மொரீசியஸ், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் வாழுகின்ற தமிழர்கள் அனைவரும் கண்ணகி வழிபாட்டை வேறு சில வடிவங்களில் சிறப்புடன் செய்து வருகின்றனர். தமிழர் தம் வாழ்வில் கண்ணகியின் பங்கு தவிர்க்கவியலாத தன்மையைப் பெற்றுத் திகழ்கிறது. இந்தப் பண்பாட்டு எச்சத்தை முற்றுமாக அழித்தொழிக்க கேரள அரசு பல்வேறு வகையிலும் முயன்று வருகிறது. இதனைத் தகர்த்து தமிழகத்தின் உரிமையை மீட்டெடுக்க தமிழக அரசு உடனடியாகக் களமிறங்க வேண்டும். இல்லையேல், இனி வருங்காலங்களில் கண்ணகியை வழிபட கேரள அரசிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படும். தமிழகத்தின் மூவேந்தர்கள் உள்பட இலங்கை மன்னன் கயவாகுவும் மற்றும் சில வடதிசை மன்னர்களும் வந்திருந்து வழிபட்ட மங்கலதேவி கண்ணகி கோட்டத்தை, தமிழகத்திற்குச் சொந்தமான அந்த நிலத்தை மீட்டெடுக்க வேண்டுமானால், இனி ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முழு நிலவு நாளில் தமிழர்கள் அனைவரும் அவ்விடத்தை நோக்கி படையெடுக்க வேண்டும். பூம்புகாரிலிருந்து புறப்பட்டு வஞ்சி மாநகர் வரை பல நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்தவள் நம் தாய்த்திரு தெய்வம் மங்கலதேவி கண்ணகி. அவளை வழிபட சில மைல்கள் நடப்பதற்கு நாம் இன்றிலிருந்தே அணியமாவோம்!

No comments: